உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள தபோவன் பகுதியில் உள்ள ரெய்னி கிராமத்தில் அமைந்துள்ள மின் திட்டத்திற்கு அருகே ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து தெளளிகங்கா ஆற்றின் நீர்மட்டம் திடீரென கிடுகிடுவென உயர்ந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த பல வீடுகள் சேதமானதோடு, பலர் மாயமாகி உள்ளனர்.
இந்நிலையில் உத்தராகண்ட் சம்பவம், தனக்கு பெருத்த சோகத்தை அளிப்பதாகவும், இது நமக்கான எச்சரிக்கை என்றும் தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவர்களில் ஒருவருமான உமா பாரதி.
“நான் மத்திய அமைச்சராக இருந்தபோது கங்கை நதி மற்றும் அதன் துணை நதிகளில், மின் திட்டங்கள் குறித்து அமைச்சகத்தின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இமயமலையில் அமைந்துள்ள உத்தராகண்டின் அணைகள் சென்சிட்டிவான பகுதி என அறிவித்திருந்தோம். இந்த இயற்கை பேரிடர் நமக்கு பெருத்த சோகத்தையும், நீங்கா வலிகளையும் கொடுத்துள்ளது. அதே நேரத்தில் இது இயற்கை அன்னை நமக்கு கொடுத்துள்ள எச்சரிக்கையும் கூட” என்று உமா பாரதி ட்வீட் செய்துள்ளார்.
மோடியின் 2014 அமைச்சரவையில் உமா பாரதி நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிர்ப்பு அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.