கொரோனா மருந்து தயாரிக்க லைசன்ஸ் கொடுக்கவில்லையே?: பதஞ்சலிக்கு உத்தரகாண்ட் அரசு நோட்டீஸ்

கொரோனா மருந்து தயாரிக்க லைசன்ஸ் கொடுக்கவில்லையே?: பதஞ்சலிக்கு உத்தரகாண்ட் அரசு நோட்டீஸ்
கொரோனா மருந்து தயாரிக்க லைசன்ஸ் கொடுக்கவில்லையே?: பதஞ்சலிக்கு உத்தரகாண்ட் அரசு நோட்டீஸ்
Published on

கொரோனாவை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பதற்காக பதஞ்சலி நிறுவனத்திற்கு லைசன்ஸ் வழங்கப்படவில்லை என்று உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் குணப்படுத்துவதற்கான மருந்தை இதுவரை எந்தவொரு நாடும் கண்டுப்பிடிக்கவில்லை. ஆனால் அதற்கான முயற்சியில் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாபா ராம்தேவுடன் தொடர்புடைய ‘பதஞ்சலி’ நிறுவனம் கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக கூறி ‘கொரோனில் மற்றும் ஸ்வாசரி’ என்ற பெயரில் சந்தையில் விற்பனையைத் தொடங்கி இருக்கிறது. மேலும் இந்த மருந்து ஏழு நாட்களுக்குள் கொரோனாவை 100% குணப்படுத்திவிடும் என்றும் விளம்பரப்படுத்த தொடங்கியது.

இது தொடர்பாக பாபா ராம்தேவ், “நாங்கள் இன்று கொரோனா மருந்தை அறிமுகப்படுத்துகிறோம். இவற்றில் இரண்டு சோதனைகளை நாங்கள் நடத்தினோம். இந்த ஆய்வு டெல்லி, அகமதாபாத் எனப் பல நகரங்களில் நடந்தது. மொத்தம் 280 நோயாளிகள் சோதிக்கப்பட்டதில் 100 சதவீதம் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸையும் அதன் சிக்கல்களையும் இதனால் கட்டுப்படுத்த முடிந்தது” என்று கூறினார்.

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் இது தொடர்பாக நேற்று ஒரு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், “பதஞ்சலி ஆயுர்வேத லிமிடெட் வெளியிட்டுள்ள கொரோனா ஆயுர்வேத மருந்துகள் பற்றிய செய்திகளை மத்திய அமைச்சகம் அறிந்திருக்கிறது. அந்நிறுவனம் மருந்துகளின் விவரங்களை வழங்கவும், அதனை வெளியிடுவதையும் விளம்பரப்படுத்துவதையும் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா மருந்து சிகிச்சை குறித்தான முறையாக அதன் கூறுகள் ஆராயப்படும் வரை இந்த மருந்தினை நிறுத்த வேண்டும்” எனக் கூறியிருந்தது.

இந்நிலையில், கொரோனாவை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பதற்காக பதஞ்சலி நிறுவனத்திற்கு லைசன்ஸ் வழங்கப்படவில்லை என்று உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில் உத்தரகாண்ட் மாநில அரசின் மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் ராவத் கூறுகையில் "திவ்யா பார்மசி நிறுவனம் கொரோனாவுக்கென கூறி மருந்துக்கான லைசன்ஸை பெறவில்லை. மேலும் நாங்களும் இது கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கக் கூடியது என தெரிவித்து ஒப்புதல் அளிக்கவில்லை. உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய, காய்ச்சலை சரி செய்வதற்குதான் மருந்துகள் கண்டுபிடிக்க லைசன்ஸ் கொடுக்கப்பட்டது. கொரோனாவுக்கு மருந்து என விளம்பரப்படுத்தியதற்கான காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவர்கள் கொடுக்கும் விளக்கம் திருப்தியளிக்கப்படாத நிலையில் அவர்களின் லைசன்ஸ் ரத்தாகும்" என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com