உத்தரப்பிரதேச மாநிலம் மைன்புரியைச் சேர்ந்த பெண் பேபி யாதவ் (33). இவருக்குக் கடந்த 2007 ஆம் ஆண்டு பிரதீப் சிங் என்பவருடன் திருமணமாகிய நிலையில் 14 வயதில் ஒரு மகன் உள்ளார். பொதுவாக பேபி யாதவ் செல்போனில் அதிக நேரம் செலவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
பிரதீப் சிங், தன் மனைவி பேபியிடம் பலமுறை இதைப்பற்றி எச்சரித்துள்ளார். இருப்பினும் அவர் கேட்காத நிலையில், ஆத்திரமடைந்த அந்தக் கணவர், பேபியின் பெற்றோரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். அவர்கள் கூறியதன் பேரில் பேபியுடைய செல்போனை பறித்துள்ளார் பிரதீப் சிங்.
இதனால் கோபமடைந்த பேபி மே 18 அன்று இரவில், தன் கணவருக்கு மயக்கமருந்து கொடுத்துப் படுக்கையில் கட்டிவைத்து எலெக்ட்டிரிக் ஷாக் கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த அவர்களின் 14 வயது மகன் தாயைத் தடுக்க முயன்றபோது மகனையும் தாக்கியுள்ளார் என்று காவல்துறையினர் அளித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து பிரதீப் சிங் அளித்த புகாரில், “எனது மனைவி தினமும் யாரோ ஒருவரிடம் மொபைல் ஃபோனில் பேசுவார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் மொபைல் ஃபோனை நான் எடுத்தேன்.
இதனால் கோபமடைந்த என் மனைவி, என்னையும் என் மகனையும் கொன்றுவிடுவதாக மிரட்டினார். கடந்த வாரம் என்னை மயக்கமடைய வைத்து மிகவும் கொடுமைப்படுத்தி, பலமுறை கிரிக்கெட் மட்டையால் என் தலையிலும் உடலிலும் தாக்கி காயத்தை ஏற்படுத்தினார். என் மகன் தடுக்க வந்தபோது அவரையும் தாக்கினார்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பிரதீப் அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக கிஷ்னி காவல் நிலைய அதிகாரி அனில் குமார் ஊடகங்களிடம் கூறுகையில், "ஐபிசி பிரிவு 307 (கொலை செய்ய முயற்சி), 328 (விஷம் மூலம் காயப்படுத்துதல்) மற்றும் 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் பேபி யாதவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது தப்பி ஓடிவிட்டார். தேடி வருகிறோம்” என்று கூறியுள்ளார். இந்நிலையில், இதற்கு காரணமான பிரதீப்பின் மனைவியை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜீவ நந்தினி