வரவிருக்கும் பண்டிகைக் காலம் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, வரும் நவம்பர் 8 ஆம் தேதிவரை 144 இன் கீழ் புதிய கட்டுப்பாடுகளை லக்னோ காவல்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மாநில தலைநகர் லக்னோவில் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 144 உடனடியாக அமலுக்கு வருகிறது. சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க மற்றும் வரவிருக்கும் பண்டிகைகள், பல்வேறு நுழைவுத் தேர்வுகள் மற்றும் கோவிட் -19 விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக நவம்பர் 8 வரை 144 வது பிரிவு அமலில் இருக்கும். இதன்படி இந்த பகுதியில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை ஒன்று திரட்டுவதை தடை செய்ய மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "கோவிட் -19 இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் பண்டிகை காலங்களில் விழிப்புடன் இருப்பது முக்கியம். எனவே, கோவிட் -19 ஊரடங்கு உத்தரவு குறித்து உத்தரபிரதேச அரசால் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். 50 % கொள்ளளவு கொண்ட கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்படாத பகுதிகளில் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்கங்கள், சினிமா அரங்குகள் திறக்க அனுமதிக்கப்படும்.
டிராக்டர்கள், மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், எரிவாயு சிலிண்டர், எரியக்கூடிய பொருள் மற்றும் எந்தவிதமான ஆயுதமும் சட்டப்பேரவையை சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவைக்கு அருகில் அனைத்து ஆர்ப்பாட்டங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன.
இந்த வழிகாட்டுதல்களை யாராவது மீறினால், அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாநில சட்டமன்ற கட்டிடம் மற்றும் அரசு அலுவலகங்களைச் சுற்றி 1 கிலோமீட்டருக்குள் ட்ரோன் ஷூட்டிங் தடைசெய்யப்பட்டுள்ளது. மக்களின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விஷயங்களை வெளியிடும் செயலில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது