உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவோ நகரில் நடந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சாலையில் சடலங்களை வைத்து போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததுடன் போலீசாரை நோக்கி கற்களை வீசத் தொடங்கினர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது.
அப்போது அங்கிருந்த போலீசார் சிலர் பிளாஸ்டிக் ஸ்டூல், கூடையை கவசமாக அணிந்து பாதுகாப்புப் பணியில் நின்று கொண்டிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியதை தொடர்ந்து, பதட்டமான பகுதிகளில் போலீசாருக்கு முறையான தலைக்கவசம், கவச உடை வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.