வந்தே பாரத் அதிவேக ரயிலானது, டெல்லி - வாரணாசி இடையே 2019ம் ஆண்டு பிப்ரவரி 15 ல் தொடங்கப்பட்டது. அதன்பின் பல்வேறு ஸ்டேஷன்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்தும் நாடு முழுவதும் இயங்கிவருகின்றன.
இந்த ரயிலின் பிரத்யேக தயாரிப்பு சென்னை ஐ.சி.எஃப்-ல் (ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை) நடைப்பெற்று வருகிறது. வெண்மை நிறமான இதன் பெட்டிகளில் எளிதில் அழுக்குப்படிகிறது எனக்கூறி, சமீபத்தில்தான் ரயில் பெட்டிகளை காவிநிறமாக மாற்ற ரயில்வே துறை முடிவு செய்தது.
இப்படியான சூழலில் 4 நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட ஒரு வந்தே பாரத் ரயில் (கோரக்பூர் - லக்னோ இடையேயான வந்தே பாரத் ரயில்), மனித தாக்குதலுக்கு உள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின்படி, நேற்று காலை 8.40 மணியளவில் உத்தர பிரதேச மாநிலத்தின் அயோதியா Cantt ஜங்க்ஷன் ரயில் நிலையத்திலிருந்து 15 கி.மீ தொலைவிலுள்ள சோஹாவல் என்ற ரயில் நிலையம் அருகே வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்த போது, மூன்று பேர் ரயிலை நோக்கி வேகமாக கல்லெறிந்துள்ளனர்.
இதில் சி1 பெட்டி (இருக்கைகள் 33, 34), சி 3 பெட்டி (இருக்கைகள் 20, 21, 22), சி5 பெட்டி (இருக்கைகள் 10, 11, 12), E1 பெட்டி (இருக்கைகள் 35, 36) ஆகியவற்றின் ஜன்னல்கள் உடைந்துள்ளன. இதனால் பயத்துடனேயே தங்களது பயணத்தை மேற்கொள்வதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம்குறித்து காவல்துறை தரப்பில் வழக்குப்பதியப்பட்ட நிலையில், குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். விசாரணையின் முடிவில் இக்குற்றத்தில் ஈடுபட்ட முன்னு பஸ்வான் மற்றும் அவரது மகன்களான அஜய் மற்றும் விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
முன்னு பஸ்வானுக்குக்கு சொந்தமான 6 ஆடுகள் வந்தே பாரத் ரயிலில் அடிபட்டு இறந்ததால் (ஜூலை 9-ம் தேதி ஆடுகள் இறந்துள்ளன. அன்றைய தினம்தான் அந்த ரயில் தொடங்கப்பட்டது), அதற்கு பழி வாங்கும் நிகழ்வாக குடும்பத்துடன் ரயிலின் மேல் கல் எரிந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.