உத்தரப்பிரதேசம் மாநிலம் மகேஷ்பூர் பகுதியில் வசித்து வருபவர் ஆஜ்மி (22). இவர், தனது கணவர் குடும்பத்தில் உள்ள 6 பேர் மீது கசிபி கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர், வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதாகவும், கணவர் தனது மூக்கை கடித்ததாகவும் கூறியுள்ளார். அந்தப் புகாரின்படி, மாமனார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அந்தப் புகாரில், "எனக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிய நிலையில், 5 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி வரதட்சணை கொடுக்கவில்லை எனக்கூறி என்னை எனது மாமியார் அடித்தார். எனது கணவர் என் மூக்கைக் கடித்துக் காயப்படுத்தினார். வரதட்சணையைக் காரணம்காட்டி, பலமுறை வீட்டைவிட்டு துரத்தியுள்ளனர். எப்போதெல்லாம் அவர்கள் துன்புறுத்துகிறார்களோ, அப்போது எல்லாம் ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி என்னைச் சமரசம் செய்துவைத்தனர்" என்று கூறியுள்ளார்.
சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த அவரது கணவர், “நான் கேட்ட வரதட்சணையைகூட தர முடியாத உனக்கு மூக்கு எதுக்கு" எனக் கேட்டு, அவரது மூக்கைக் கடித்துத் துப்பியதாகக் கூறப்படுகிறது.
இதனால் வலி தாங்க முடியாத அவர், முதலில் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் அளித்தார். அதன்பேரிலேயே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணைக் கொடுமையில் மனைவியின் மூக்கை, கணவர் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.