உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகளின் மீது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுடை கார் புகுந்து நான்கு விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவரை முக்கிய குற்றம்சாட்டப்பட்டவராக சேர்த்து 5000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை உத்தரபிரதேச காவல்துறை தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் மீது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுடை கார் புகுந்ததில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். அதன் பிறகான வன்முறையின் ஒரு பத்திரிகையாளர் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன் பிறகு வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உத்தரப்பிரதேச காவல்துறைக்கு பல முக்கியமான அறிவுறுத்தல்களையும் உச்சநீதிமன்றம் கொடுத்துள்ளது.
இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரபிரதேச காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்பொழுது 5000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையில் ஆஸிஸ் மிஸ்ரா முக்கிய குற்றஞ்சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டுள்ளார், அதேபோல மத்திய உள்துறை இணை அமைச்சரின் உறவினராக கருதப்படக்கூடிய விரேந்தர் சுக்லா என்பவரும குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தற்பொழுது உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரைகள் மிக தீவிரமாக நடைபெற்று வரக்கூடிய சூழலில் இந்த விவகாரம் அரசியல் களத்தில் அதி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் மன்னிப்பு கேட்க வேண்டிய தருணம் வந்து விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டவரின் தந்தை இன்னமும் மத்திய அமைச்சர் பதவியில் இருப்பதால் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் அப்போதுதான் உண்மை வெளிவரும் என கூறியுள்ளார்.
அதேபோல சமாஜ்வாதி உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் இந்த விவகாரத்தை தற்போது தீவிரமாக கையில் எடுத்துள்ளது.