கொரோனா ஒழிப்பின் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் ஒன்றை 'மிஷன் ஜூன்' என்ற பெயரில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு.
30 நாட்களில் சுமார் 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் இந்தத் திட்டத்தை உத்தரப் பிரதேச அரசு இன்று முதல் ஆரம்பித்துள்ளது. இந்த இயக்கத்திற்கு 'மிஷன் ஜூன்' என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஓட்டுநர்கள், விற்பனையாளர்கள் மற்றும் ரிக்ஷா இழுப்பவர்களுக்கு ஜூன் 15 முதல் மாநிலம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி இயக்கம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இவர்கள்தான் இந்த ஊரடங்கு காலகட்டத்திலும் தங்கள் பணியின் ஒரு பகுதியாக தினமும் பலரை சந்திப்பது, உரையாடுவது என இருக்கிறார்கள். இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பட்சத்தில் கொரோனாவின் வீரியத்தை பெருமளவு குறைக்கலாம் என அம்மாநில அரசு நம்புகிறது.
இதுதொடர்பாக நேற்று லக்னோவில் நடந்த கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், "ஜூன் மாதத்தில் ஒரு கோடி மக்களுக்கு தடுப்பூசிகளை போடுவதே எங்கள் குறிக்கோள். போர்க்கால அடிப்படையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
தடுப்பூசி விநியோகத்தில் எந்த இடைவெளியும் ஏற்படாத வகையில் மத்திய அரசு மற்றும் தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலக்கை அடைய, மாநிலம் முழுவதும் சுமார் 6,000 தடுப்பூசி மையங்களை அரசு அமைக்கும்.
மேலும், சமூகத்தின் அனைத்து பிரிவுகளும், குறிப்பாக சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கு தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊடகவியலாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் நீதித்துறை உறுப்பினர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்களை மாநில அரசு ஏற்கெனவே அமைத்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் நேற்று வரை 1,83,32,104 பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 34,80,181 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
செரோ கணக்கெடுப்பு: மக்களிடையே கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியின் அளவைக் கண்டறிய ஜூன் 4 முதல் 'செரோலாஜிகல் சர்வே' செய்ய உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டது. கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பதை தீர்மானிக்க தனிநபர்களின் ரத்த சீரமை பரிசோதிப்பது இந்த ஆய்வில் அடங்கும். கணக்கெடுப்பின் அறிக்கை ஜூன் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.