உத்தரபிரதேசத்தில் எஸ்சி,எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு தனியார் மருத்துவ கல்லூரிகளில் அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளார் முதலமைச்சர் யோகி அதித்தியநாத்.
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி ஆட்சி காலத்தில் தனியார் பொது மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் எஸ்சி,எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டது. தற்போது அந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தவிட்டுள்ளார் முதலமைச்சர் யோகி அதித்தியநாத்.
உத்தரபிரதேச அரசு மாநிலத்தில் தற்போது உள்ள கல்வி முறையை சீரமைக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை 6-ம் வகுப்பில் இருந்து பயிற்றுவிக்கப்பட்ட ஆங்கிலம் இப்போது நர்சரி பள்ளிகளில் இருந்து பயிற்றுவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், அரசு பள்ளிகளில் மாணவர்கள் ஒரு வெளிநாட்டு மொழியை தேர்ந்தெடுத்து கற்றுக்கொள்ளும் முறையையும் உ.பி. அரசு கொண்டு வர உள்ளதாக தெரிகிறது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ள அதே வேளையில் உத்தரப் பிரதேசத்தில் புதிதாக 25 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும் எனவும் உபி அரசு அறிவித்துள்ளது. புதிதாக 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளது யோகி அரசு.