பெண்கள் மீதான பாலியல் ரீதியான குற்றங்கள் இந்தியாவில் எந்தளவுக்கு அதிகரிக்கிறது என்பதற்கு இன்னுமொரு உதாரணமாய் வந்துள்ளது, இச்செய்தி. அதன்படி உத்தரப்பிரதேசத்தில் உள்ள பண்டா மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் பெண் நீதிபதி ஒருவர், உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “எனது உயிரை மாய்த்துக்கொள்ள எனக்கு அனுமதி கொடுங்கள். எனது வாழ்க்கை முடியட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த கடிதத்தில், ”நான் நீதிபதியாக இருக்கும் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றும் ஒருவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளேன். அவருடன் பணியாற்றும் சகாக்களாலும் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளேன். இதுதொடர்பாக அலாகாபாத் நீதிமன்றத்தில் புகாரளித்தும், நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. என்ன ஆனது என்று யாரும் கேட்கவில்லை. ஏன் கவலையாக இருக்கிறேன் என்று கண்டுகொள்ளவில்லை. நான் ஒரு குப்பையை போல நடத்தப்பட்டுள்ளேன்.
தேவையற்ற ஒரு புழுவைப்போல உணர்கிறேன். இதுவரை முடுக்கிவிடப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கைகள் எல்லாம் போலியாகவே இருந்துள்ளன” என்று துயரை வெளிப்படுத்தியுள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அலாகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதி சந்திரசூட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.