மதுராவின் கிருஷ்ணர் கோயில் நிலத்தில் இருப்பதாகக்கூறி மசூதியை அகற்றக்கோரிய வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ராமஜென்ம பூமி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது, உத்தரபிரதேசம் மதுராவில் கிருஷ்ணஜென்ம பூமியை மீட்க வேண்டு' என இந்து அமைப்புகள் சார்பில் கோரிக்கை முன்வகைக்கப்பட்டது. அத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் கிருஷ்ண ஜென்ம பூமி நிர் மாண் நியாஸ் என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டது.
அத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா நீதிமன்றத்தில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க, பகவான் கிருஷ்ண விராஜ்மன் சார்பில் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘மதுராவில் உள்ள கேசவ தேவ் கோயிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு ஷாயி ஈத்கா மசூதி கட்டப்பட்டிருக்கிறது. மசூதி அமைந்துள்ள இடம் கிருஷ்ண ஜென்ம பூமிக்கு சொந்தமானது. அந்த ஆக்கிரமிப்பு மசூதியை அகற்ற வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் கிருஷ்ண ஜென்ம பூமியின் 13.37 ஏக்கர் நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த வழக்கை இன்று விசாரித்த மதுரா நீதிமன்றம், மசூதியை அகற்றக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது. வழிபாட்டு தலங்களுக்கு கீழான 1991ஆம் ஆண்டு சட்டத்தை குறிப்பிட்டு நீதிமன்றம் வழக்கை நிராகரித்தது.