உத்தரப் பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா. இவருடைய மனைவி சாபி. இந்த நிலையில், சந்திர பிரகாஷின் தங்கைக்கு ஏப்ரல் 26ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளில் குடும்பத்தினர் ஈடுபட்டு வந்த சூழலில், தங்கையின் திருமணத்துக்காக தங்க மோதிரம் மற்றும் தொலைக்காட்சி ஒன்றைப் பரிசளிக்க சந்திர பிரகாஷ் திட்டமிட்டிருந்தார். ஆனால், சந்திர பிரகாஷின் மனைவி சாபிக்கு இது பிடிக்காததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சாபியின் சகோதரர்கள் சந்திர பிரகாஷை அழைத்து இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், சந்திர பிரகாஷ் உடன்படாததால், அவரை சாபியின் சகோதரர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். சுமார் ஒரு மணிநேரம் கட்டைகளைக் கொண்டு, சந்திர பிரகாஷ் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சந்திர பிரகாஷின் மனைவி சாபி மற்றும் அவரது சகோதரர்கள் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.