உ.பி: கமிஷன் கொடுக்காததால் புல்டோசரால் சாலையை பெயர்த்த பாஜக MLA-ன் ஆதரவாளர்கள் - யோகி எடுத்த ஆக்‌ஷன்

உத்தரப்பிரதேசத்தில் கமிஷன் தராததால் புதிதாகப் போடப்பட்ட சாலையை புல்டோசர் வைத்து பெயர்த்து எடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி. சாலை
உ.பி. சாலைட்விட்டர்
Published on

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் உள்ள ஷாஜகான்பூர் முதல் புடான் வரையில் பொதுப்பணித் துறையினர் புதிதாகச் சாலை அமைத்து வருகின்றனர். இந்த சாலை அமைக்கும் ஒப்பந்ததாரரிடம், பாஜக எம்.எல்.ஏ வீர் விக்ரம் சிங்கின் ஆதரவாளர்கள் எனக் கூறிக்கொண்டு சிலர், 5 சதவிகித கமிஷன் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அதேநேரத்தில் அவர்களுக்கு ஒப்பந்ததாரர் கமிஷன் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஜக்வீர் சிங் உள்ளிட்ட எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள் சுமார் 20 பேர் திடீரென புல்டோசரைக் கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட சாலையை அரைகிலோ மீட்டர் தூரத்திற்கு பெயர்த்து எடுத்துள்ளனர். இந்த செய்தி நாடு முழுவதும் பேசுபொருளானது. எதிர்க்கட்சியினர் பலரும் இதனைக் கண்டித்து அறிக்கைவிட்டனர்.

இதுகுறித்து அந்த ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் ரமேஷ் சிங், ’ஷாஜகான்பூரில் சாலை அமைக்கும் பணிக்காக, எனக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. சாலை அமைக்கும் பணியை முடித்து, முறையாக கணக்கு வழக்குகளைச் சமர்ப்பித்தேன். ஆனால், பாஜக எம்.எல்.ஏ. விக்ரம் சிங் தரப்பிலிருந்து ஜக்வீர் சிங் என்பவர், 5 சதவிகிதம் கமிஷன் கேட்டு அழுத்தம் கொடுத்து வந்தார். நான் தர மறுத்ததால், அடியாட்களுடன் வந்து சாலையைப் பெயர்த்து எடுத்தார்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: ’13 முறை கைது, 154 கசையடிகள்.. 31 ஆண்டு சிறை’ - அமைதிக்கான நோபல் பரிசை வென்ற ஈரான் போராளிப் பெண்!

இந்த விவகாரம் தொடர்பாக, காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சாலையை சேதப்படுத்தியதாக 15-20 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த விவகாரம் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கவனத்திற்குச் சென்றது. இதையடுத்து சாலையை சேதப்படுத்திய பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன், அவர்களிடம் இருந்து புதிய சாலை அமைக்க ஆகும் முழுத் தொகையையும் வசூலிக்கவும் உத்தரவிட்டார்.

இதுகுறித்து மாவட்ட எஸ்பி அசோக் குமார் மீனா, ’பாஜக எம்எல்ஏ வீர் விக்ரம் சிங்கின் ஆதரவாளர் ஜக்வீர் சிங் தலைமையில் சுமார் 20 பேர், கமிஷன் தரவில்லை என்று கூறி கடந்த அக்டோபர் 2ஆம் தேதி புல்டோசர் மூலம் சாலையை தோண்டி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகிறோம்’ என்றார்.

இதையும் படிக்க: இந்தியாவின் 10 பெரும் பணக்காரர்கள்: 7வது இடத்தில் பெண் தொழிலதிபர்! எத்தனை கோடிகள் தெரியுமா?

மாவட்ட கலெக்டர் சஞ்சய் குமார் பாண்டே, ’இந்த வழக்கு தொடர்பாக முழு தகல்களை திரட்டி உள்ளோம். சப் கலெக்டர் தலைமையில் குழு அமைத்துள்ளோம். விசாரணை அமைப்பின் அறிக்கைக்கு பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

எம்எல்ஏ வீர் விக்ரம் சிங்
எம்எல்ஏ வீர் விக்ரம் சிங்

இந்த விவகாரம் குறித்து எம்எல்ஏ வீர் விக்ரம் சிங், ’ஜக்வீர் சிங் என்னுடைய ஆதரவாளரோ அல்லது எனது உதவியாளரோ இல்லை. ஆனால் அவர் பாஜகவைச் சேர்ந்தவர்தான். ஆனால் அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க: AsianGames2023: சாய் கிஷோர், வாஷிங்டன் சுழலில் சுருண்ட வங்கதேசம்.. இறுதிப்போட்டியில் இந்திய அணி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com