உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் நடைபெற்ற விபத்து இந்தியாவில் கடந்த ஓராண்டில் நடந்த 3-வது பெரிய ரயில் விபத்தாக கருதப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தெகாத் மாவட்டத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி இந்தூர் - பாட்னா ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டதில் சுமார் 107 பயணிகள் இறந்தனர். 200 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து ஜனவரி 21 ஆம் தேதி ஆந்திராவின் விஜயநகரம் அருகே ஹிராகண்ட் எக்ஸ்ப்ரஸ் தடம்புரண்டதில் 39 பயணிகள் இறந்தனர். 69 பேர் காயமடைந்தனர். 1981 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் பாக்மதி ஆற்றில் பாலம் உடைந்து ரயில் விழுந்ததில் சுமார் 800 பேர் இறந்தனர். இது இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்தாக கருதப்படுகிறது.
இந்நிலையில், தற்போது உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் பகுதியில் உட்கல் விரைவு ரயிலின் 14 பெட்டிகள் திடீரென தடம்புரண்டதில் 23 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் 53 சதவிகித விபத்துகள் தடம் ரயில் புரண்டதால் ஏற்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 586 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அவற்றில், கடந்தாண்டு கான்பூர் அருகே நிகழ்ந்த விபத்துதான் மோசமான ரயில் விபத்தாகும். அதில் 150 பேர் உயிரிழந்தனர்.