இந்திய தேசமே தற்போது தங்களது அரசின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார். 16ஆவது மக்களவையின் கடைசி அலுவல் நாள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்தார்.
16-வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரின், கடைசி நாள் கூட்டத்தில் பங்கேற்று நிறைவுரையாற்றிய பிரதமர் மோடி, 30 ஆண்டுகளுக்கு முன் நம் நாடு எந்த அடையாளமும் இல்லாமல் மிக மோசமான நிலையில் இருந்ததாகவும், 2014ஆம் ஆண்டில் பெரும்பான்மை ஆட்சி அமைந்த பின்னர் பிற நாட்டு தலைவர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
ரஃபேல் விவகாரம் தொடர்பாக தாம் பேசினால் நாடாளுமன்றத்தில் நிலநடுக்கம் ஏற்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்த நிலையில், 5 ஆண்டுகளாக நிலநடுக்கம் ஏதும் ஏற்படவில்லை என பிரதமர் மோடி கூறினார்.
இந்தியா உலகின் மிகப்பெரிய ஆறாவது பொருளாதார நாடாக வளர்ந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி, நடப்பு மக்களவைத் தொடரில் ஜி.எஸ்.டி., கருப்புப்பண ஒழிப்பு, ஊழல் தடுப்பு உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், இந்த மக்களவையின் அதிக அளவிலான பெண் உறுப்பினர்கள் இருப்பதாகவும், இரு பெண் அமைச்சர்களும், சபாநாயகராக பெண் ஒருவரும் இருப்பதாக குறிப்பிட்டார்.
தவறுகள் ஏதும் செய்திருந்தால் தம்மை மன்னித்துவிடுமாறு காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கேவிடம் கோரிக்கை விடுத்த மோடி, தம்மை பாராட்டிய சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங்க்கு சிறப்பு நன்றி தெரிவித்தார்.