ஒரே நாளில் ரூ.80 கோடி வசூல்: 50 லட்சம் ஃபாஸ்ட்டேக் பரிவர்த்தனை!

ஒரே நாளில் ரூ.80 கோடி வசூல்: 50 லட்சம் ஃபாஸ்ட்டேக் பரிவர்த்தனை!
ஒரே நாளில் ரூ.80 கோடி வசூல்: 50 லட்சம் ஃபாஸ்ட்டேக் பரிவர்த்தனை!
Published on

சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் வசூல் ஒரே நாளில் ரூ.80 கோடியைக் கடந்தது புதிய சாதனை படைக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 1 முதல் ஃபாஸ்ட்டேக் கட்டாயம் என்பது நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், இந்தச் சாதனை கவனிக்கத்தக்கது.

இதுதொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டது. அதில், சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் வசூல் டிசம்பர் 24ஆம் தேதி அன்று முதல் முறையாக ரூ.80 லட்சத்தைக் கடந்தது. அன்றைய தினம் வரலாற்று சாதனையாக மொத்த 50 லட்சம் ஃபாஸ்ட்டேக் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

நெடுஞ்சாலைகளில், ஃபாஸ்ட் டேக் பயன்படுத்துவது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 2.20 கோடி ஃபாஸ்ட்டேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல், ஃபாஸ்ட்டேக் பயன்படுத்துவது கட்டாயமாகிறது. இதற்காக, சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் தடையின்றி செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டுள்ளது.

ஃபாஸ்ட்டேக் முறையைப் பயன்படுத்துவதன் மூலம் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோருக்கு நேரமும், எரிபொருளும் மிச்சமாகிறது. இந்த மின்னணு கட்டணப் பரிமாற்றத்துக்காக, மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

ஃபாஸ்ட்டேக்குகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச்சாவடி மையங்கள் மற்றும் நாடு முழுவதும் 30,000 விற்பனை மையங்களில் கிடைக்கிறது. இதுதவிர அமேசான், ப்ளிப் கார்ட், ஸ்னாப் டீல் ஆகிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மூலமாகவும் இவை வழங்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்துக்காக 27 வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதை எளிமையாக ரீசார்ஜ் செய்வதற்கும் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர சுங்கச்சாவடிகள் மற்றும் விற்பனை மையங்களில் ரொக்கப் பணம் கொடுத்தும் ஃபாஸ்ட்டேக்-ஐ ரீசார்ஜ் செய்யலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com