'இந்திய நூலாசிரியர்களின் புத்தகங்களை கல்வி நிறுவனங்களில் பயன்படுத்தும்போது பிரதமரின் தற்சார்பு இந்தியா திட்டம் வெற்றி பெறும்’ என்று ஏஐசிடிஇ சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில், ‘’அனைத்து கல்வி நிறுவனங்களும் ஏஐசிடிஇ பரிந்துரை செய்த இந்திய நூலாசிரியர்களின் புத்தகங்களை கற்பித்தல் பணியில் பயன்படுத்த முன்வரவேண்டும்.
பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளை மேம்படுத்தவும் தொழில்துறையின் தேவைகள் மற்றும் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவும் புகழ்பெற்ற நிபுணர்களின் உதவியுடன் இந்திய ஆசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் பரிந்துரை செய்த புத்தகங்களை அடிப்படையாக கொண்டு புதிய பாடத்திட்டத்தை ஏஐசிடிஇ, கடந்த 2018-ம் ஆண்டு உருவாக்கியது.
பொறியியல், தொழில்நுட்பத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக இந்திய எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தை அனைத்து பல்கலைக்கழகங்களும், உயர் கல்வி நிறுவனங்களும் ஏற்றுக் கொண்டுள்ளது.
பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் இந்திய நூலாசிரியர்களின் புத்தகங்களை கல்வி நிறுவனங்களில் பயன்படுத்தும்போது இந்திய புத்தகங்கள் உலக அளவில் பயன்பாட்டுக்கு வரும். இதன்மூலம் ஆத்ம நிர்பார் பாரத் அபியான் (தற்சார்பு இந்தியா) திட்டம் வெற்றி பெறும்’’ என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.