மும்பை பயங்கரவாத குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தஹாவூர் ஹூசைன் ராணாவை அமெரிக்கா, இந்தியாவிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்தது. இதை அடுத்து வரும் டிசம்பரில் தஹாவூர் ஹூசைன் ராணா இந்தியா கொண்டுவரப்படுவார் என்று அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன.
உலகையே உலுக்கிய மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவமானது 2008ல் நடந்தது நினைவிருக்கலாம். கடல் வழியாக மும்பைக்குள் புகுந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சிலர் தெற்கு மும்பையில் எட்டு இடங்களில் தாக்குதலை ஏற்படுத்தினர். சத்ரபதி சிவாஜி முனையம், தி ஓபராய் டிரைடன்ட் ஓட்டல் , தாஜ் மஹால் பேலஸ் மற்றும் டவர், லியோபோல்ட் கஃபே, காமா மருத்துவமனை (பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை), நரிமன் ஹவுஸ் யூத சமூக கூடம், மெட்ரோ சினிமா, டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டிடத்தின் பின்னாலுள்ள வழிபாதை மற்றும் சேவியர் புனித கல்லூரி. மும்பை துறைமுக பகுதி மஜகாணிலும் வில்லே பார்லேயில் ஒரு டாக்ஸியிலும் குண்டு வெடிப்புகள் நடந்தது.
உலகையே உலுக்கிய இந்த தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதில் 6 அமெரிக்கர்களும் அடக்கம். சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குக்தலில் ஈடுபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் மட்டும் போலிசாரால் உயிரோடு பிடிக்கப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டார்.
இதில் மற்றொரு முக்கிய குற்றவாளியான பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியான தஹாவூர் ஹூசைன் ராணா (63) என்பவரை இந்திய அரசாங்கம் தீவிரமாக தேடிவந்த நிலையில், இவர் கனடா குடியுரிமை பெற்று அமெரிக்காவில் தலைமறைவாக இருந்தார்.
இந்தியாவால் தேடப்பட்ட குற்றவாளியான தஹாவூர் ஹூசைன் ராணாவை 2009ல் குற்றவழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது அமெரிக்கா.
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒப்படைப்பு ஒப்பந்தம் விதிமுறைகளுக்குள் வரும் என்று நீதிமன்றம் முன்பு கூறியிருந்தது. இதை அடிப்படையாகக்கொண்டு ராணாவின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், பயங்க்ரவாதி தஹாவூர் ஹூசைன் ராணா தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்காவை, இந்தியா கேட்டுக்கொண்டது.
இதற்கு அமெரிக்காவும் சம்மதம் தெரிவித்திருந்தது. அதன்படி அமெரிக்காவில் ராணாவின் தண்டனை முடிந்த பிறகு 2020ஆம் ஆண்டின் முற்பகுதியில் ராணா இந்தியாவிற்கு கொண்டுவரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோவிட் பாதிப்பால் தாமதப்படுத்தப்பட்டது.
மீண்டும் இந்தியாவின் கோரிக்கையின் மனுமீதான விசாரணை நடைபெற்றதை அடுத்து அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் தீவிரவாதியான தஹவுர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்தது. வரும் டிசம்பரில் ராணா இந்தியாவிற்கு கொண்டுவரப்படலாம் என்று அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன. ராணாவின் மனுவை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து இந்த நாடு கடத்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.