உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் பதிவாளரால் தினசரி அடிப்படையில் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால், மிக முக்கியமான வழக்குகள் மற்றும் அவசர தேவை உள்ளிட்ட வழக்குகளை மனுதாரர்களின் சார்பில் அவர்களது வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் ஆஜராகி விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி கோரிக்கை வைப்பார்கள்.
இதன் அடிப்படையில் அவசர வழக்குகளாக மனுக்கள் மீதான விசாரணை பட்டியலிடப்பட்டு வருகிறது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக நேற்று பதவியேற்றுள்ள சஞ்சீவ் கண்ணா இனிமேல் வாய்மொழியான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என கூறியுள்ளார். அவசர வழக்குகளாக பட்டியலிட வாய்மொழியாக இனி தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யக்கூடாது.
மாறாக மின்னஞ்சல் மற்றும் எழுத்துப்பூர்வமாக மட்டுமே இனிவரும் காலங்களில் அவசர வழக்குகளுக்கு முறையீடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். முக்கியமான வழக்குகளை தவிர கைது உள்ளிட்ட வழக்குகளுக்கும் வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி அவசர வழக்காக முறையீடு செய்யும் நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.