சச்சினை தெரியாது என ஷரபோவா கூறிய விவகாரத்தில், அவருக்கு எதிராக எதிர்மறை கருத்துகளை பதிவிட்ட ரசிகர்கள் தற்போது அவரிடம் மன்னிப்புக்கோரி வருகின்றனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை சச்சின் டெண்டுல்கர் பார்த்தார். அப்போது அந்த மைதானத்தில் விளையாடிய ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, செய்தியாளர்களிடம் பேசியபோது, “டெண்டுல்கர் யார் என்று எனக்கு தெரியாது” என்றார்.
இவரது இந்தப் பேச்சு டெண்டுல்கர் ரசிகர்களை கோபமடைய செய்ய, சமூக வலைதளங்களில் ஷரபோவாக்கு எதிராக பல்வேறு கருத்துகளை அப்போது ரசிகர்கள் பதிவு செய்தனர். அதற்கு தற்போது அவர்கள் மன்னிப்புக் கோரியுள்ளனர்.
காரணம் என்ன?
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.அண்மையில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியும் வன்முறை முடிந்தது.
இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக பிரபல பாப் பாடகி ரியான்னா “ நாம் ஏன் இதைப்பற்றி பேசவில்லை?’’ என்று கேள்வி எழுப்பியதுடன், போராட்டத்தை முடக்குவதற்கான முயற்சி என்ற செய்தியை டேக் செய்து அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இவரது பதிவை தொடர்ந்து பல பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டனர். இந்நிலையில் இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர், “ இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம்; ஆனால் பங்கேற்பாளர்கள் அல்ல. இந்தியர்களுக்கு இந்தியாவைத் தெரியும்; ஒரே நாடாக ஒற்றுமையுடன் இருக்கட்டும்” என்று கருத்து தெரிவித்தார்.
இவரது இந்தக் கருத்து அவரது ரசிகர்கள் சிலர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர்கள், 2015-ஆம் ஆண்டு டென்னிஸ் வீரர் ஷரபோவோக்கு எதிராக பதிவிட்ட கருத்துகளுக்கு மன்னிப்பு கோரியுள்ளனர்.
அதில் ஒருவர் கூறும்போது, “ ஷரபோவா நீங்கள் சச்சினை பற்றி சரியாக கூறினீர்கள். அவர் நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய தகுதியான நபர் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.
இன்னொருவர் கூறும்போது, “ அன்புள்ள மரியா, சச்சின் பெயர் விவகாரத்தில், உங்களுக்கு எதிராக நாங்கள் பதிவிட்ட கருத்துகளுக்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர் பதிவிட்ட கருத்தில், “ அன்றைய தினம் உங்களுக்கு எதிராக பக்குவமில்லாமல் சில கருத்துகளை நான் பதிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.