கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். மெர்ச்சன்ட் நேவியில் கேப்டனாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஜெயபிரகாஷ், கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் அடூரைச் சேர்ந்த செளமியா என்பவரை கடந்த 25 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.
இதற்கிடையே செளமியா விவாகரத்து கோரி கடந்த 2017ல் பத்தனம்திட்டா குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அதே நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்றால், தனக்கு நீதி கிடைக்காது என்று கூறிய ஜெயபிரகாஷ், விவாகரத்து வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம், வழக்கை திருவல்லா நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 5 வருடமாக வழக்கின் விசாரணை திருவல்லா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நீதிபதி பில்குல் அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு ஒவ்வொரு முறையும் விசாரணைக்கு வரும்போது ஜெயபிரகாஷ் மங்களூருவில் இருந்து திருவல்லாவுக்கு வந்து சென்றபடியே உள்ளார். வழக்கின் விசாரணை பல வருடமாக நீடிப்பதால், ஜெயபிரகாஷுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே இந்த வழக்கு நேற்றும் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போதும் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இது ஜெயப்பிரகாஷுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்த நீதிபதி பில்குலின் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளார். இந்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயபிரகாஷை கைது செய்தனர்.
இதுகுறித்து ஜெயபிரகாஷ், ”இந்த வழக்கில் செளமியாவின் வழக்கறிஞரும், நீதிபதியும் எனக்கு எதிராக இணைந்து செயல்படுகின்றனர். என் தரப்பு வாதம் நியாயமாகக் கேட்கப்படவில்லை” என அவர் குற்றஞ்சாட்டியுள்ளதாகத் தெரிகிறது. இந்த சம்பவத்தால், நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.