யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வில் மதச்சார்பின்மை குறித்து கேட்கப்பட்ட கேள்வி விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்தாண்டு சிவில் சர்வீஸ் தேர்வின் முதல்நிலை தேர்வு கடந்த ஜூலை மாதம் 2ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இம்மாதம் 20ஆம் தேதி முதல் முதன்மை(Mains) தேர்வு நடைபெற்று வருகிறது. 20ஆம் தேதி கட்டுரை தாள் (Essay) தேர்வு நடைபெற்றது. நேற்று பொதுப்பகுதி தாள் 1 மற்றும் 2 தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வில் பொதுப்பகுதி தாள் 1 (General Studies Paper-1)-ல் மதச்சார்பின்மை தொடர்பாக ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதாவது ''மதச்சார்பின்மையினால் நமது கலாச்சார நடைமுறைகளுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து விவரிக்கவும்'' என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்தக் கேள்வி விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பின்மையின் நேர்மறையான கருத்தை பின்பற்றுகிறது. அதாவது அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் முறையை பின்பற்றுகிறது. ஆனால், இந்தக் கேள்வி மதச்சார்பின்மையின் எதிர்மறை கருத்தை குறிக்கும் விதகமாக உள்ளது என்று பலர் தெரிவித்துள்ளனர். இந்தியா பல்வேறு மதங்களை கொண்ட மதச்சார்பற்ற நாடாக இருக்கும் நிலையில், அது எப்படி ஒரு கலாசாரத்துக்கு சவாலாக இருக்கும் என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடைசியாக கடந்த 2014 மற்றும் 2018ஆம் ஆண்டு முதன்மை தேர்வுத் தாளில் இந்திய மதச்சார்பின்மைக்கும் மேற்கத்திய நாடுகளின் மதச்சார்பின்மைக்கு உள்ள வேறுபாடுகளை ஆராயும் கேள்வியை கேட்கப்பட்டது. ஆனால் இம்முறை மதச்சார்பின்மையும் கலாச்சாரமும் தொடர்பு படுத்தி கேட்கப்பட்டுள்ள கேள்வி விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.