செய்தியாளர்: விக்னேஷ் முத்து, ஜெனிட்டா ரோஸ்லின்
மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் (UPSC) மனோஜ் சோனி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஆனால், மனோஜ் சோனியின் ராஜினாமா இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.
பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பராக அறியப்படும் மனோஜ் சோனி, 2017-ல் யுபிஎஸ்சி தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன், குஜராத்தில் உள்ள இரண்டு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக பணியாற்றினார்.
2017-ஆம் ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக சேர்ந்தார். இதையடுத்து மே 16, 2023 அன்று யு.பி.எஸ்.சி தலைவராக மனோஜ் சோனி பதவியேற்றுக் கொண்டார். இந்தவகையில் இவரது பதவிக்காலம் வரும் 2029 ஆம் ஆண்டு முடிவடைகிறது. இந்த சூழலில்தான் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இவர் யுபிஎஸ்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோதே, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், இவர் ஒரு அரசியல் கட்சி நபராக செயல்படுகிறார் என்ற விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும், இவர் தலைவராக வந்தால், யுபிஎஸ்சி தேர்வுகள் நேர்மையாக செயல்படுமா? என்ற கேள்வியையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்தனர்.
சமீபத்தில் கூட, மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய பூஜா கேட்கர், காரில் சைரன் பொருத்தியது, கூடுதல் ஆட்சியரின் அறையைப் பயன்படுத்தியது என தனது அதிகாரத்துக்கு மீறிய சில நடைமுறைகளைச் செய்துகொண்டதாகவும், போலி மாற்றுத் திறனாளி சான்றிதழ்களைச் சமர்ப்பித்தது, சாதி இடஒதுக்கீட்டிலும் வருமானத்தை குறைத்து காட்டி அதற்கான சலுகைகளைப் பெற்றதாகவும் புகார்கள் எழுந்தன.
இதுமட்டுமல்லாது, தேர்வில் தேர்வாகக்கூடிய ஐஏஎஸ் அதிகாரிகள் சரியான பின்னணியில் இருந்து தேர்வாகவில்லை என்று பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில்தான், மனோஜ் தற்போது தனது பதவிக்காலம் முடியும் முன்பே பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால், ”எனது தனிப்பட்ட காரணங்ளுக்காகத்தான் பதவியை ராஜினாமா செய்தேன்” என மனோஜ் சோனி விளக்கமளித்துள்ளார். அதுவும் ஒரு மாதத்திற்கு முன்பே தனது ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், இவரது ராஜினாமா கடிதம் தற்போது வரை ஏற்கப்படவில்லை. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இதனை ஏற்கும் பட்சத்தில் உடனடியாக இந்த பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு , இதற்கான அடுத்த தலைவர் உடனடியாக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.