ஊரடங்கு காலத்துக்கு முன்பு தனது அம்மா வீட்டுக்குச் சென்ற மனைவி தன்னுடைய வீட்டுக்குத் திரும்ப வராததால் வெறுப்படைந்த கணவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 26 ஆயிரம் பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1778 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பால் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அம்ரோஹா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான சில நாள்களிலேயே பெண் தனது அம்மா வீட்டுக்குச் சென்றுள்ளார். கணவர் தன் வீட்டுக்கு வருமாறு மீண்டும் மனைவியை அழைத்துள்ளார். ஆனால் ஊரடங்கைக் காரணம் காட்டி அவருடன் செல்ல மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
ஆனால் மீண்டும் மீண்டும் மனைவியை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுவிட்டதால் தன்னால் வர முடியாது என மனைவி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆனால் கணவர் தான் முறைப்படி அரசிடம் அனுமதிச் சீட்டு பெற்றுத் தருவதாகவும் மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கும் மறுத்த மனைவி, ஊரடங்கின் போது பயணித்தால் தனக்கும் கொரோனா தொற்று ஏற்படும் எனக் கூறியுள்ளார்.
பின்பு காவல்துறையில் மனைவியை அழைத்து வருவதற்கு உதவுமாறு புகாரளித்துள்ளார். இது குறித்து விசாரித்த காவல் துறையினர் கணவரிடம் காரணம் கேட்டுள்ளனர். அதற்குப் பதிலளித்த அந்த நபர் "என் தாய் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார், அவரை கவனித்துக்கொள்ள மனைவி வர வேண்டும்" எனக் கூறியுள்ளார். இந்தக் காரணம் ஏதுவாக இல்லை எனக் கூறிய காவல் துறையினர், ஊரடங்கு முடிந்தவுடன் மனைவியை அழைக்குமாறு தெரிவித்தனர்.