நடத்தையில் சந்தேகம்: மருமகளுக்கு ’அக்னிபரீட்சை’ வைத்த மாமியார்!

நடத்தையில் சந்தேகம்: மருமகளுக்கு ’அக்னிபரீட்சை’ வைத்த மாமியார்!
நடத்தையில் சந்தேகம்: மருமகளுக்கு ’அக்னிபரீட்சை’ வைத்த மாமியார்!
Published on

இன்றைய நவீன காலத்திலும் இப்படிப்பட்ட பஞ்சாயத்துகள் வட மாநிலங்களில் நடந்துகொண்டு இருப்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகில் உள்ள நகலா பாரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுமனி. இவருக்கும் ஜெய்வீர் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. மூன்று மாதம் வரை ஜாலியாக சென்ற திருமண வாழ்க்கை, பிறகு நரகமானது சுமனிக்கு. கணவர் சந்தேகப்பட, மாமியார் அதற்கு ஏற்ற மாதிரி தினமும் திட்டத் தொடங்கினார். பிறகு அவர் நடத்தையில் இருவரும் சந்தேகப்பட ஆரம்பித்தனர்.

பிறகு ஒரு நாள் கத்தியால் சுமனியின் கையை வெட்டிய ஜெய்வீர், தனக்கு துரோகம் செய்தால் கொன்றுவிடுவதாக மிரட்டியிருக்கிறார். தன்னை நம்புமாறு கெஞ்சியிருக்கிறார் சுமனி. தினம் அனுபவிக்கும் இந்த சந்தேகக் கொடுமை பற்றி பெற்றோருக்கு கண்ணீருடன் தெரிவித்து வந்துள்ளார். அவர்களும் பொறுமையாகச் செல்லும்படி கூறியுள்ளனர். 

இந்நிலையில் ஜெய்வீர் குடும்பத்தினருக்கு மருமகள் மீது சந்தேகம் வலுக்க, ஊர் பஞ்சாயத்துக்கு விவகாரம் சென்றது. அவர்கள் ’இதற்கு ஒரே வழிதான் இருக்கு. ’அக்னிபரீட்சை’ நடத்திருவோம். குற்றம் சாட்டப்பட்டவங்க அக்னியில கையை வையுங்க, யார் பொய் சொல்றாங்களோ, அவங்க கை தீயில் சுடும். சொல்லாதவங்க கை சுடாது’ என்று ஆச்சரிய தீர்ப்பளித்தது பஞ்சாயத்து. ஒப்புக்கொண்டது குடும்பம். 

முதலில் ஜெய்வீர் அக்னியில் கைய வைத்துவிட்டு சில நொடிகளில் எடுத்துவிட்டார். ‘சரி, இவர் பொய் சொல்லலை’ என்று தீர்ப்புக் கூறியது பஞ்சாயத்து. அடுத்து சுமனியை வைக்கச் சொன்னார்கள். அவரும் நீட்டினார். ஆனால் பக்கத்தில் இருந்த கணவர், அவர் கையைப் நீண்ட நேரம் தீயின் மீது வைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார். இதனால் சுமனியின் இரண்டு கையும் வெந்துவிட்டது. அலறி துடித்த அவர், பஞ்சாயத்தில் இருந்து வெளியேறி, தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்தார். 

அவர்கள் இந்த கொடுமையை கண்டு போலீசில் புகார் அளித்தனர். மண்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

சுமனி கூறும்போது, ‘அவர்கள் என்னை எப்போதும் தவறாக குற்றம்சாட்டிக்கொண்டே இருப்பார்கள். கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாகச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதோடு என்னை பொய் பேசுகிறவள் என்றும் திட்டுவார்கள். அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com