மகாபாரத கதை பாணியில் லுடோ விளையாட்டில் தோற்றதால் பெண் ஒருவர் தன்னையே வீட்டு உரிமையாளரிடம் பந்தயமாக வைத்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியிருக்கிறது.
ஆன்லைன் சூதாட்ட கேம்களால் பலரது உயிரும், பணமும் பறிபோவதால் அதனை ஒழிக்க பெரும் போராட்டமே நடந்து வரும் வேளையில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் லுடோ விளையாட்டின் மீது கொண்ட ஆர்வத்தால் பந்தயம் வைத்து விளையாடியிருக்கிறார்.
அதன்படி, உத்தர பிரதேசத்தின் நாகர் கொட்வாளியில் உள்ள தேவ்காளி பகுதியைச் சேர்ந்தவர் ரேனு என்ற பெண். இந்த பெண்ணின் கணவர் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் பணியாற்றி வருகிறார். லுடோ விளையாட்டுக்கு அடிமையான அந்த பெண் தனது வீட்டு உரிமையாளருடன் தொடர்ந்து லுடோ விளையாடுவதை பழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
இப்படியாக தொடர, ஒரு நாள் இருவரும் சேர்ந்து பந்தயம் கட்டி லுடோ விளையாடிக் கொண்டிருந்தபோது தொடர்ந்து பந்தயம் வைக்க பணம் இல்லாததால் ரேனு தன்னையே வீட்டு உரிமையாளரிடம் பந்தயமாக வைத்திருக்கிறார்.
இது குறித்து ராஜஸ்தானில் இருக்கும் தனது கணவனிடமும் ரேனு கூறியிருக்கிறார். இதனையடுத்து பிரதாப்கருக்கு திரும்பிய ரேனுவின் கணவர் போலீசிடம் புகார் கொடுத்து இது பற்றி சமூக வலைதளத்திலும் பதிவிட்டிருக்கிறார்.
அதன்படி, தேவ்காளியில் ரேனு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ஆறு மாதங்களுக்கு முன்பு வேலைக்காக ஜெய்ப்பூர் சென்றதும் அங்கிருந்து ரேனுவுக்கு பணம் அனுப்பியிருக்கிறார் அவரது கணவர். அந்த பணத்தை வைத்து லுடோ விளையாடி மொத்தத்தையும் தீர்த்திருக்கிறார். கடைசியில் பந்தயம் கட்ட பணம் இல்லாததால் தன்னையே பந்தயமாக வைத்திருக்கிறார். ரேனுவுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்களாம்.
லுடோ விளையாட்டில் தோற்றதால் தற்போது ரேனு வீட்டு உரிமையாளரோடு வாழ்ந்து வருவதாகவும், கணவர் அழைத்தும் ஹவுஸ் ஓனரை விட்டு வர ரேனு மறுப்பதாகவும் கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசியுள்ள போலீஸ் அதிகாரி சுபோத் கவுதம், “நாங்கள் அந்த நபருடன் தொடர்புகொள்ள முயற்சிக்கிறோம், தொடர்பு கொண்டவுடன் விசாரணையைத் தொடங்குவோம்.” என தெரிவித்திருக்கிறார்.