உத்தரப்பிரதேசத்தில் டால்பின் மீனை கொடூரமாக அடித்துக் கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில், ஆற்றின் கால்வாயில் காணப்பட்ட அரிய வகை டால்பின் மீன் ஒன்றை ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர் கும்பல் ஒன்று கோடரி, கட்டைகளை கொண்டு அடித்து கொல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அந்த வீடியோ பார்ப்பவர்களைக் கலங்கச் செய்தது.
இதுதொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், அந்த வீடியோ உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரதாப்கர் பகுதியில் எடுக்கப்பட்டது தெரியவந்தது. அதனையடுத்து, வீடியோ பதிவில் தெரிந்த அடையாளத்தின் அடிப்படையில் 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்தியாவில் மட்டுமே காணக் கூடிய நன்னீர் டால்பின் வகைகளில் ஒன்று கங்கை நதி டால்பின். இதன் மற்றொரு பிரிவு சிந்து நதி டால்பின் என அழைக்கப்படுகிறது. மிகவும் அரிதான, தீங்கிழைக்காத உயிரினங்களில் ஒன்றான இந்த மீனைதான் கும்பல் அடித்துக் கொன்றுள்ளது.