தள்ளுவண்டியில் வைத்து காய்கறி விற்கும் வியாபாரி ஒருவர் விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் மீது சிறுநீர் கழிக்கும் வீடியோ ஒன்று ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள பகுதியில் அரங்கேறியிருக்கிறது.
இந்த நிகழ்வு அனைத்தையும் அவ்வழியே காரில் வந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதன்படி ஷரிஃப் கான் என்ற முதியவர் அதே பகுதியில் பல ஆண்டுகளாக காய்கறி மற்றும் பழங்களை தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்து வருகிறார். பரேலியில் உள்ள இஸ்ஸாத் நகர் பகுதியைச் சேர்ந்த துர்கேஷ் குப்தா என்பவர் காரில் சென்ற போது 55 வயது மதிக்கத்தக்க அந்த வியாபாரி காய்கறிகள் மீது சிறுநீர் கழித்த காட்சியை பதிவு செய்திருக்கிறார்.
இதனையடுத்து துர்கேஷ், அந்த வியாபாரியிடம் சென்று ஏன் இப்படி அநாகரிகமாக நடந்துக் கொண்டீர்கள்? எனக் கேட்டபோது, ஆத்திரமடைந்து அப்படியெல்லாம் செய்யவில்லை என மறுத்து பேசியிருக்கிறார் ஷரிஃப். ஆனால் தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாக கூறியும் அந்த முதியவர் ஒப்புக்கொண்டதாக தெரியவில்லை. பின்னர் இருவருக்கும் இடையே வாய் வார்த்தை வளரவே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஒன்று கூடி என்ன? ஏது? என கேட்கத் தொடங்கியபோது நடந்ததை துர்கேஷ் கூறியிருக்கிறார்.
இதனை நம்பாத இஸ்ஸாத் நகர் மக்களிடம் வியாபாரியின் செயலை வீடியோவாக எடுத்ததை காண்பித்த பிறகே நம்பியிருக்கிறார்கள். இதனையடுத்து அந்த வியாபாரியை மக்கள் தாக்கியதோடு, போலீசிடமும் ஒப்படைத்திருக்கிறார்கள்.
அதன் பிறகு காய்கறி வியாபாரி ஷரிஃப் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்திருக்கிறார்கள். அப்போது “எனக்கு உடல்நலம் சரியாக இருக்கவில்லை. அதனால் வண்டியை ஒரு பக்கம் பிடித்துக்கொண்டு சிறுநீர் கழித்தேன்” எனக் கூறியிருக்கிறார். கைது செய்யப்பட்ட ஷரிஃப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என பரேலி எஸ்.எஸ்.பி. அனிருத் பங்கஜ் கூறியுள்ளார்.