போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் ரூ.50 லட்சம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய உ.பி அரசு!

போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் ரூ.50 லட்சம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய உ.பி அரசு!
போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் ரூ.50 லட்சம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய உ.பி அரசு!
Published on

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் ரூ.50 லட்சம் கேட்டு உத்தரப் பிரதேச நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி சலோ விவசாயிகள் போராட்டம் 23-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மற்ற இடங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் 10 லட்சம் விவசாயிகள் போராட்டத்தில் குதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மாநில அரசு அவர்களைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்ட பாரதிய கிசான் யூனியன் விவசாயிகள், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக ஆதரவாக சமீபத்தில் போராட்டம் நடத்தினர். தொடர்ச்சியாக இவர்கள் மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக மாவட்டத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் பாரதிய கிசான் யூனியன் (அஸ்லி) மாவட்டத் தலைவர் ராஜ்பால் சிங் யாதவ் மற்றும் உழவர் தலைவர்களான ஜெய்வீர் சிங், பிரம்மச்சாரி யாதவ், சதேந்திர யாதவ், ரவுடாஸ் மற்றும் வீர் சிங் ஆகிய ஆறு பேருக்கு சம்பல் மாவட்ட நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக 50 லட்ச ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அமைதியை நிலைகுலைக்கிறார்கள் என்று போலீஸ் அளித்த அறிக்கையின்படி, மாவட்ட நிர்வாகம் இவர்களுக்கு 50 லட்ச ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

"ஹயத்நகர் காவல் நிலையத்தில் இருந்து சில நபர்கள் விவசாயிகளைத் தூண்டுகிறார்கள், அவர்கள் அமைதியை நிலைகுலைக்கிறார்கள் என்று எங்களுக்கு ஓர் அறிக்கை கிடைத்துள்ளது. இதனால் அவர்கள் தலா 50 லட்சம் ரூபாய்க்கு தனிப்பட்ட பத்திரங்களை நிரப்புமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்று சம்பல் மாவட்ட மாஜிஸ்திரேட் தீபேந்திர யாதவ் கூறியிருக்கிறார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 111 (சமாதானத்தை மீறக்கூடிய எந்தவொரு நபருக்கும் எதிராக மாஜிஸ்திரேட் பிறப்பிக்கப்படும் சட்டத்தின் பிரிவு) பிரிவின் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது சர்ச்சையை ஏற்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து காவல் நிலைய பொறுப்பாளர் மற்றொரு அறிக்கையை அளிக்கவே இந்த ஆறு பேரும் தலா 50,000 ரூபாய்க்கு தனிப்பட்ட பத்திரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். "அவர்கள் எங்களை தூக்கிலிடலாம் அல்லது சிறைக்கு அனுப்பலாம். நாங்கள் விவசாயிகளின் உரிமைகளுக்காக போராடுகிறோம். ஆனால் ஒருபோதும் அந்த தொகையை செலுத்த மாட்டோம்" என அந்த ஆறு பேரும் தொடர்ந்து போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com