உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசு காவல்துறையில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது. மாநிலத்தில் காலியாக உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. பிப்ரவரி 17 மற்றும் 18 என இரு தினங்களில் 75 மாவட்டங்களில் இந்த் தேர்வுகள் நடைபெற்றன. மொத்தம் 2,385 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 48,17,441 பேர் தேர்வெழுதினர். தேர்வறையில் கடுமையான கட்டுப்பாடுகளும், கண்காணிப்பாளர்கள் அதிகளவிலும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இருப்பினும், இந்த தேர்வில் ஆள்மாறட்டம் செய்ததாக காவலர்கள் உட்பட பலர் கைதாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் ரன் விஜய் சிங் கூறுகையில், “இதுவரை 19 முதல் 20 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் பீகாரில் இருந்து விடைகளை எழுதுவதற்காக அழைத்துவரப்பட்டவர்கள். ஷிகோபாத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரில் 2 பேர் கான்ஸ்டபிள்கள்.
கான்ஸ்டபிள் இருவரும் ஷிகோஹாபாத்தை சேர்ந்தவர்கள். இதில் கான்ஸ்டபிள் நிரஞ்சன் 3-4 பேருக்கு பரீட்சை எழுதி இருந்தார். பதிலுக்கு அவர் ஒவ்வொருவரிடமும் தலா 3 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். கான்ஸ்டபிள் அனுஜ் என்பவர் சுமித் என்ற நபருக்காக தேர்வு எழுத இருந்தார். ஆனால் நாங்கள் அவரை இடைமறித்துவிட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், எங்களிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன என்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் இவர்கள் இருவரும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பிப்ரவரி 17 ஆம் தேதி வினாத்தாள் இணையத்தில் கசிந்ததாக மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியானது. இருப்பினும் இது வெறும் வதந்திதான் என்று காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தரபிரதேசத்தின் காவல்துறை ஆட்சேர்ப்பு வாரியம், “முதற்கட்ட விசாரணையில் குற்றவாளிகள் டெலகிராமின் எடிட் வசதியைப் பயன்படுத்தி காகித கசிவு குறித்து தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புகின்றனர். உத்தரப்பிரதேச காவல்துறை முழுமையாக விசாரிக்கிறது. தேர்வு சுமூகமாகவும் பாதுகாப்பதாகவும் நடந்து வருகிறது” என தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் முறைக்கேட்டில் ஈடுபட்டதாகவோ அல்லது கூறி கூறி 244 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து உத்தரப்பிரதேச காவல்துறைத் தலைவர் பிரசாந்த் குமார் இதுகுறித்து கூறுகையில், “நியாயமற்ற வழிகளில் ஈடுபடும் நபர்கள் மற்றும் கும்பல்கள் பிடிக்கப்பட்டு அவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நியாயமற்ற வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் தேர்வின் புனிதத்தை சீர்குலைக்கும் அவர்களின் மோசமான திட்டங்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் செயல்படுத்துவதற்கு முன்பே பெரும்பாலான கைதுகள் நடந்துள்ளன” என தெரிவித்துள்ளார்.