உத்தரப்பிரதேச மாநிலம், சாம்பல் மாவட்டத்தில் ஜூமா மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அங்கிருந்த அதிகாரிகள் மீது அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதால் வன்முறை வெடித்தது. பதற்றம் ஏற்பட்டதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனிடையே, வன்முறை மேலும் பரவாமல் இருக்க சாம்பல் மாவட்டத்தில் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் காவல்துறையினர் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே சர்ச்சைக்குரிய மசூதியும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வன்முறை சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 30 காவல்துறையினர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, இணையம் முடக்கப்பட்டுள்ளது.