உத்தரபிரதேசத்தில் ஓடும் குப்பை வண்டியில் ஏறி தண்டால் எடுத்து. கெத்தாக உணர்ந்த இளைஞர், சில நொடிகளில் தலைக்குப்புற விழுந்து காயமடைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை மாநகராட்சி வேன்கள் இரவு நேரங்களில் எடுத்துச் செல்லும். இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல குப்பைகளை அள்ளிக்கொண்டு மாநகராட்சி வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு மதுபோதையில் இருந்த இளைஞர், தன்னை சூப்பர் ஹீரோவாக நினைத்துக் கொண்டு அந்த வேனை தொற்றிக் கொண்டு ஏறியுள்ளார்.
பின்னர், அந்த வேனின் மேற்புறத்தில் ஏறிய அந்த இளைஞர் என்ன நினைத்தாரோ, திடீரென தண்டால் (push ups) செய்ய ஆரம்பித்தார். சுமார் 5-6 தண்டாள்களை செய்த அவர் ,தன்னைத் தானே வியந்த படி வேனில் கெத்தாக நின்றபடி வந்தார்.
அப்போது ஓட்டுநர் திடீரென பிரேக் போடவே, பஸ்ஸில் இருந்து வடிவேலு விழுவதை போல வேனின் முன்புறம் தலைக்குப்புற விழுந்தார். இதில் அவரது முகம், உடல், கை, கால்களில் பலத்த அடிப்பட்டது. அவரது இடுப்பு எலும்பும் லேசாக முறித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரை ஒரு சில வாரங்களுக்கு படுத்த படுக்கையாகவே இருக்குமாறு மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
அவர் கீழே விழுந்த வீடியோவை பின்னால் வந்த வாகன ஓட்டி தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்ட லக்னோ கூடுதல் துணைக் காவல் ஆணையர் ஸ்வேதா ஸ்ரீவத்சவா, "சக்திமானாக மாற நினைத்தவர், இன்னும் சில நாட்களுக்கு உட்கார கூட சக்தி இல்லாதவராக மாறிவிட்டார். தேவையற்ற சாகசங்களை சாலையில் செய்யாதீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.