பீகார் மாநிலத்தில் உள்ள போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீர்நாத் பாண்டே. இவர் உத்தரபிரதேசத்தில், 17 வயது சிறுமியை கடத்தியதற்காக ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டவர்.
இந்நிலையில்தான், கடந்த மே மாதம் தனது மகளைக் காணவில்லை என அதே சிறுமியின் தந்தை கொய்ராவுனா காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனை அடுத்து முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். தொடர் விசாரணையில் சிறுமி மீட்கப்பட்ட நிலையில், பாண்டே சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீனில் விடுதலையான அவர், கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி மீண்டும் அப்பெண்ணைக் கடத்தி, ஒரு மாத காலம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கொய்ராவுனா காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் மனோஜ் குமார் கூறுகையில், “பாண்டே ஜாமீனில் வெளிவந்த சில தினங்களில், பெண்ணை கடத்திச் சென்றுள்ளார். செப்டம்பர் 2 ஆம் தேதி ஜாங்கிகஞ்ச் ரயில் நிலையம் அருகே சிறுமியை விட்டுவிட்டு பாண்டே தப்பியோடிவிட்டார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண், தான் கடந்த ஒரு மாதகாலமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பாண்டே மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ், பாலியல் வன்கொடுமை, கடத்தல் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளான பெண்ணின் மருத்துவ பரிசோதனையில், பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
நேற்று (09/09/24) இட்டாஹரா சௌராஹாவில் பாண்டே கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.