என்னதான் வேலைக்கு முழுமனதோடும் விருப்பத்தோடும் சென்றாலும் புதன் - வியாழன் கிழமைகளை தாண்டுவதற்குள் பலருக்கும் நிலைமை அய்யோ என்றாகிவிடும். எப்பொழுதுதான் சனி, ஞாயிறு (விடுமுறை நாட்கள்) வருமோ என்ற எதிர்ப்பார்ப்பில்தான் பெரும்பாலானவர்களுக்கு வார நாட்களே கழிகிறது.
இப்படியான மனிதர்களுக்கு இடையே, கடந்த 26 ஆண்டுகளாக வேலைக்கு சென்ற ஒருவர், ஒரே ஒரு முறை மட்டுமே விடுமுறை எடுத்துள்ள சம்பவம் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் தேஜ்பால் சிங். இவர், கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் துவரிகேஷ் சுகர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் ஒன்றில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறார். இவர், தான் 26 வருடங்களாக பணியாற்றிவரும் அலுவலகத்திற்கு ஒரே ஒரு நாள் மட்டுமே இதுவரை விடுமுறை எடுத்துள்ளாராம். இவர் எடுத்த அந்த ஒருநாள் விடுப்பு ஜீன் 18, 2003ல் எடுக்கப்பட்டதாம். அதுவும் தனது சகோதரரின் திருமணத்திற்கான அவர் எடுத்த ஒருநாள் விடுப்பு அது.
சம்பந்தப்பட்ட அந்நிறுவனம் இவருக்கு 'வருடம் 45 நாட்கள் விடுமுறை எடுக்கலாம்’ என பாலிசி கொடுத்துள்ளது. இப்படி எல்லா வருடமும் வரும் நாட்களிலும், ஒரே ஒருமுறை, அதுவும் ஒரே ஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளார். அதுதான் மேற்குறிப்பிட்ட சகோதரரின் திருமணத்துக்கான விடுப்பு. அதுமட்டுமல்லாது ஒரு நாள் கூட தாமதமாக இவர் வேலைக்கு வந்ததில்லை என்று சில உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன. இதன்மூலம் 'India Book of Records’ ல் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளார் அவர்.
இதுகுறித்து அவர் உள்ளூர் செய்தி தொலைக் காட்சிகளுக்கு அளித்த பேட்டியில், “வேலையின் மீது கொண்ட அதீத ஆர்வம் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகள், பண்டிகை தினங்களான ஹோலி, தீபாவளி போன்ற எந்த நாட்களிலும் விடுமுறை எடுக்கவில்லை நான்” என்று தெரிவித்துள்ளார்.
எப்பொழுதான் அலுவலகத்திற்கு விடுமுறை கிடைக்கும் என நினைக்கும் ஊழியர்களுக்கு மத்தியில், விடுமுறை கொடுத்தாலும் எடுக்கமாட்டேன் எனும் இந்த ஊழியரின் செயல், பலருக்கும் பெரும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.