உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாம்பல் என்ற பகுதியில் ஹோட்டல் நடத்திவந்த ஒருவர், `வேண்டுமென்றே இந்துக் கடவுள்கள் படம் பதிந்த நியூஸ்பேப்பரில் சிக்கன் வைத்து மடித்துக்கொடுத்தார்’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உ.பி.யை சேர்ந்த தலிப் ஹூசைன் என்பவர், தனது கறிக்கடையில் கறிகளை கடவுள் படம் இருக்கும் நாளிதழில் வைத்து மடித்து விற்பதாக இணையம் வழியாக சிலர் பதிந்திருந்தனர். அவர் வேண்டுமென்றே இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக கூறி அவரது புகைப்படத்தையும், அவருடைய கடையிலிருந்த புகைப்படத்தையும் சிலர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர்.
இதைத்தொடர்ந்து தலிப் ஹூசைனிடம் சாம்பல் பகுதி காவல்துறை விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் காவல்துறையினரை தாக்க முற்பட்டதாக பி.டி.ஐ.க்கு சாம்பல் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, தலிப் ஹூசைன் தங்களை கத்தியை காட்டி மிரட்டியதற்காகவும், இதையொட்டி அவர் மீது காவல்துறை வழக்கு பதிந்திருப்பதாகவும் காவல்துறை தரப்பு பி.டி.ஐ.க்கு தெரிவித்திருக்கிறது.
ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இவ்விவகாரம் பூதாகாரமான நிலையில், சாம்பல் பகுதி போலீஸ் தங்கள் ட்விட்டர் கணக்கில் `இவர்மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தலிப் ஹூசைன் மீது, ஐ.பி.சி. 153 ஏ (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 295-ஏ (வேண்டுமென்றே மதநம்பிக்கையை இழிவு செய்தல்; வெறுப்பை உருவாக்க முயற்சித்தல் உள்ளிட்ட செயல்கள்), 307 (கொலை முயற்சி) ஆகிய வழக்குகள் பதியப்பட்டிருக்கிறது.
இவர் நடத்தும் மெஹாக் உணவகம் என்ற ஹோட்டலின் கவுண்ட்டரில் இருந்து தெய்வங்களின் புகைப்படங்களுடன் கூடிய செய்தித்தாள்கள் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளதாக சில உ.பி. நெட்டிசன்கள் ட்விட்டரில் தெரிவித்துவருகின்றனர்.