தொழிலதிபர் எனக்கூறி 20க்கும் மேற்பட்ட பெண்களை திருமண தகவல் இணையப்பக்கம் மூலம் ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.
உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் கௌரவ் தமிஜா. 46 வயதான இவர் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார். ஆனால் இணையதளங்களில் உள்ள திருமண தகவல் பக்கங்களில் இவர் தொழிலதிபர் என பதிவேற்றம் செய்து பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். வருடத்துக்கு 30 லட்சத்துக்கும் அதிகமாக சம்பாதிக்கும் தொழிலதிபர் என தன்னைப்பற்றி தகவல்களை பதிவேற்றம் செய்த கெளரவ், 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார்.
பெண்களிடம் அறிமுகம் ஆகி அவர்களிடம் இருந்து பணம் பறித்து வந்துள்ளார் கெளரவ். விவாகரத்தானவர்கள், விதவைகள் ஆகியோரையே குறி வைத்து கெளரவ் ஏமாற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கெளரவின் மீது சந்தேகம் அடைந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர். கெளரவிடம் இருந்து செல்போன்கள், பல சிம் கார்டுகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.