'கொரோனா சிகிச்சை முறைப்படி அளிக்கப்படவில்லை' என்று செய்தி ஊடகத்திடம் புகார் கூறிய 65 வயது முதியவர் மீது உத்தரப்பிரதேச அரசு அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளது.
சில தினங்களுக்கு முன் ஊடகம் ஒன்றில் ஒரு முதியவர் புகைப்படம் வெளியாகியிருந்தது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் மெவ்லா கோபால்கர் என்றொரு சிறிய கிராமத்தில் உள்ள ஹர்வீர் தலன் (65) என்ற முதியவர்தான் அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றிருநதார். அந்தப் புகைப்படத்தில் முதியவர் ஹர்வீர் தலன் ஒரு வேப்பமரத்தடியில், மரக்கிளைகளில் குளுக்கோஸ் பாட்டில் தொங்கிக் கொண்டிருக்க, அங்கேயிருந்த கட்டிலில் ஆக்ஸிஜன் உதவியோடு சிகிச்சை எடுத்து வந்தார். மேலும், அந்த முதியவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அந்தப் புகைப்படத்துடன் செய்தி ஒன்று பகிரப்பட்டிருந்தது.
அந்தச் செய்தியில் மேலும், "எங்கள் பகுதியில் போதுமான அளவு மருத்துவ வசதிகள் இல்லை. அதனால், கொரோனாவால் பாதிக்கப்படும் இந்தப் பகுதி மக்கள் எந்த உதவியும் கிடைக்காமல் இப்படி தவித்து வருகிறோம். இந்தப் பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் எங்களுக்கு படுக்கைகள் கொடுக்க மறுக்கிறார்கள்" என்று முதியவர் ஹர்வீர் தலன் குற்றம் சுமத்தியிருந்தார். இந்தப் புகைப்படமும், செய்தியும் வைரலாக, இது தொடர்பாக பிற ஊடகங்கள் அந்த கிராமத்துக்கே சென்று நேரில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருக்கும் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டறிநத்தில் உண்மை நிலவரமானது தெரியவந்தது.
அதன்படி, கடந்த 13-ம் தேதி அக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த சோதனையில் முதியவர் ஹர்வீர் தலானுக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட, இதையடுத்து பற்றாக்குறைக்கு மத்தியிலும் அவருக்கு தனியாக படுக்கை வசதியை ஏற்படுத்திக்கொடுத்து சிகிச்சைப்பெற கிராம நிர்வாகம் அறிவுறுத்தி இருந்ததாம். ஆனால் முதியவர் மருத்துவமனை செல்ல மறுத்துவிட்டு மரத்தடியில் படுத்துக்கொண்டு சிகிச்சைபெற்று வருவதோடு பொய்யான குற்றச்சாட்டுகளை ஊடகங்களிடம் தெரிவித்து வருகிறார் என்று கிராம நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணைக்கு பின் பொய் குற்றச்சாட்டினை பரப்பியதாகவும், அதிகாரிகளின் உத்தரவை மீறியதாகவும், நோய் தோற்று அபாயத்தினை ஏற்படுத்தியதாகவும் கூறி, அந்த முதியவர் மீது உத்தரப்பிரதேச அரசு அதிரடியாக மூன்று பதிவுகளின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.