உத்தரப்பிரதேசத்தில் சிஏஏ போராட்டக்காரர்களின் புகைப்படங்கள் மற்றும் முகவரியை பேனர்களாக வைத்தது அநியாயத்தின் உச்சம் என்று கூறியுள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம், இதற்காக யோகி ஆதித்யநாத் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களின் புகைப்படங்கள் பேனர்களாக லக்னோ, ஹஸ்ரத்கஞ் பகுதிகளின் முக்கிய சாலைகளிலும், அம்மாநில சட்டப்பேரவை கட்டடத்தின் முன்பும் வைக்கப்பட்டிருந்தன. மாநில முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படியே பேனர்கள் வைக்கப்பட்டதாக அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பேனர் வைக்கப்பட்ட விவகாரம் குறித்து அலகாபாத் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. போராட்டக்காரர்களின் புகைப்படத்தை அச்சிட்டு பேனர் வைத்தது அநியாயத்தின் உச்சம் என்று கூறிய நீதிபதிகள், இது தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் செயல் என உத்தரப்பிரதேச அரசை சாடினர். அதனைத் தொடர்ந்து வாதிட்ட உத்தரப்பிரதேச மாநில அரசு தரப்பு வழக்கறிஞர், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களின் புகைப்படங்கள் தான் பேனர்களாக வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் நீதிமன்றம் தலையிடுவது முறையல்ல என்று கூறினார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழக்கூடாது என்ற நோக்கத்தில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன என்று தன் வாதத்தை முன்வைத்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.