உத்தரபிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஜீன்ஸ் அணிந்ததற்காக குடும்பத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
உத்தரபிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியின் உடல் திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை இரவு வரை பல மணிநேரங்கள் அப்பகுதியில் உள்ள பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. அவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதையடுத்து, காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வலம் வரும் வீடியோக்களில், பாலத்தின் மீது தண்டவாளத்தில் இருந்து சிறுமியின் உடல் தொங்கும் காட்சியும், அந்த சடலத்தை ஒரு போலீஸ் மற்றும் உள்ளூர்வாசிகள் மீட்கும் காட்சியும் பதிவாகியிருந்தன. மற்றொரு வீடியோவில் மூத்த போலீஸ் அதிகாரிகள் அந்த பகுதியை ஆய்வு செய்வது காட்டப்பட்டது.
இது தொடர்பான விசாரணையில், "அவள் விரதம் இருந்துவிட்டு மாலையில் குளித்தபின்பு ஜீன்ஸ் மற்றும் ஒரு டாப் அணிந்துகொண்டு பூஜைக்குச் சென்றாள். உடை சரியில்லை என்று அவளின் தந்தை கூறியதை அவள் எதிர்த்து பேசினாள், இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் அவளை குச்சியால் அடித்தனர், இதில் அவள் மரணமடைந்தாள். அதன்பின்பு அந்த சடலத்தை குடும்பத்தினர் பாலத்திலிருந்து தூக்கி எறிந்தனர்"என்று சிறுமியின் தாய் கூறினார்.