உத்தரபிரதேசத்தில் பரேலி என்ற கிராமத்தில் 21 வயது இளைஞர் வேற்று மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து அந்த பெண்ணுடன் ஊரை விட்டு சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் கொண்ட ஒரு கும்பல் அந்த ஆணின் வீட்டிற்கு தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முகமது சதாம் என்ற 21 வயது இளைஞர் தனது வீட்டருகே உள்ள 20 வயது மதிக்கத்தக்க இந்து சமூகத்தைச்சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரின் காதலுக்கும் எதிர்ப்பு கிளம்பியநிலையில், காதலர்கள் இருவரும் அந்த ஊரை விட்டு சென்றுவிட நினைத்து கடந்த வாரம் திங்கள் இரவு இருவரும் ஊரைவிட்டு வெளியேறியுள்ளனர்.
பெண்ணைக் காணாத பெற்றோர் சதாமுக்கு எதிராக போலீஸில் புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து ஊரைவிட்டு சென்ற சதாமையும் அந்த இளம்பெண்ணையும் தேடிக்கண்டுபிடித்த போலீஸார், சதாமை கைதுசெய்து, பின் அப்பெண்ணை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து அப்பெண்ணின் பெற்றோர் சதாம் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
இந்நிலையில், வலதுசாரி இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த சிலர், சதாம் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி, அப்பெண்ணின் பெற்றோருக்கும், போலீசாருக்கும் அழுத்தத்தைக் கொடுத்து வந்துள்ளனர். இருப்பினும் இருவரும் அமைதியாக இருக்கவே, வன்முறையை ஏற்படுத்தும் பொருட்டு வலதுசாரி அமைப்பினர், சதாமின் வீட்டிற்கும், கடைக்கும் தீவைத்துள்ளனர்.
இதில் சதாம் கடையில் இருந்த பொருட்களும், வீட்டில் இருந்த பொருட்களும் தீக்கிரையாகி உள்ளது. நிலமையை கட்டுக்குள் கொண்டுவர கலவரம் செய்தவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதுடன், சதாம் மீது பெண்ணை கடத்திக்கொண்டு போன வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் அலட்சியம் காட்டியதற்காக சில கான்ஸ்டபிள் மேலும் சப் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எனினும் அக்கிராமத்தில் மேற்கொண்டு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க 100க்கு மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.