உ.பி.: ஜோடியாக நடிக்க ரூ.2000 வரை பணம்; முதலமைச்சரின் சமூகத் திருமண திட்ட நிகழ்வில் மெகா மோசடி!

உத்தரபிரதேச மாநிலத்தில் சமூக திருமணத்தின் பெயரில் மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
uttarpradesh
uttarpradeshpt web
Published on

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதலமைச்சரின் சமூக திருமண திட்டத்தின் கீழ் விதவைகள், விவாகரத்து மற்றும் கைவிடப்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஆதரவற்ற குடும்பங்களுக்கு அரசாங்கம் திருமணங்களை நடத்திவைக்கிறது. பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் திருமணம் செய்துகொள்ளும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.35 ஆயிரம் டெபாசிட் செய்யப்படுகிறது. மேலும், உடைகள், நகைகள், பாத்திரங்கள் உள்ளிட்ட திருமணப் பொருட்களை வாங்கிவதற்காக ரூ.10 ஆயிரமும், நிகழ்ச்சிக்காக ரூ.6000 பணமும் ஒவ்வொரு ஜோடிக்கும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த சமூக திருமண திட்டத்தின் மூலம் மோசடியில் ஈடுபட்டதாக இரு அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாலியா மாவட்டத்தில் ஜனவரி 25 ஆம் தேதி சமூகத் திருமண திட்டத்தின் கீழ் திருமண நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் 568 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், மணமக்களாக காட்டிக்கொள்வதற்கு பலருக்கும் பணம் கொடுக்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

மணமக்களாக தங்களைக் காட்டிக்கொள்ள ரூ.500 முதல் ரூ.2000 வரை பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், பாஜக எம்.எல்.ஏ கேத்கி சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மோசடி குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது, பணம் கொடுக்கப்படுவதற்கு முன்பே குற்றம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்தான முழுவிசாரணையும் மேற்கொள்ள மூன்று பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

பாலியா மாவட்டத்தின் மாஜிஸ்திரேட் ரவீந்திர குமார் இதுகுறித்து கூறுகையில், உடனடி விசாரணை தொடங்கப்பட்டு, சமூக நலத்துறையின் உதவி வளர்ச்சி அலுவலர் உட்பட ஒன்பது பேர்மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com