உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்த ஆண்டு தீபாவளியை, அயோத்தியில் மெகா தீபாவளியாகக் கொண்டாட முடிவு செய்துள்ளார்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனியார் ஆங்கில ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், இந்த ஆண்டு தீபாவளியை அயோத்தியில் மெகா தீபாவளியாகக் கொண்டாட உள்ளோம். இதற்கு ராமஜென்ம பூமி விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றார்.
யோகி தனது ஆதரவாளர்களுடன் தீபாவளி கொண்டாடுவதற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே அயோத்தியில் தொடங்கிவிட்டன. இந்தக் கொண்டாட்டத்தின்போது சுமார் 2 லட்சம் மண் விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பேட்டியில், “பத்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமாயணத்தில் அயோத்திக்கு முக்கியப் பாத்திரம் உள்ளது. அயோத்தி முன்னமே முன்னேறிய நகரம். நாட்டின் பல இடங்களில் இருந்து மக்கள் அயோத்திக்கு வருகின்றனர். அப்படிப்பட்ட நகரத்தை எங்களுடைய பெருமையாகக் கருதுகிறோம்” என்று யோகி கூறினார்.
அயோத்தி பிரச்னை தேர்தலுக்காக பயன்படுத்தப்படுகிறதா என்று என்ற கேள்விக்கு, ராமர் கோவில் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், அதுபற்றி எதுவும் பேச முடியாது என்றும், நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஒப்புக்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறினார்.
தனது அரசு அயோத்தியின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் பணியாற்றி வருவதாகவும், உத்தரப் பிரதேச மாநிலத்தை பாரம்பரியத்தின் அடையாளமாக்குவது தனது லட்சியம் என்றும் யோகி தெரிவித்தார். மேலும், தனது அரசு பழமையையும், புதுமையையும் இணைக்கும் புள்ளியாக செயல்படும் என்றும் கூறினார்.