உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் மது அருந்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் (Hathras) என்ற இடத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராக சைலேந்திரா சிங் கவுதம் பணியாற்றி வருகிறார். இவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும்போதே மது பாட்டிலை (டின் பீர்) உடன் வைத்திருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இணையத்தை அதிர வைத்த அந்த காட்சிகளில் தனது இருக்கையின் பின்பும், மேஜையின் கீழேயும் மது பாட்டில்களை வைத்திருந்தார் சைலேந்திரா சிங் கவுதம்.
இந்தக் காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, டெல்லி மகளிர் ஆணைய தலைவரும், சமூக ஆர்வலருமான ஸ்வாதி மாலிவால், இந்த சம்பவத்தின் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உ.பி காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து சைலேந்திரா சிங் கவுதமை அம்மாநில கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது. குற்றச்சாட்டு குறித்து மூன்று அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது.