லக்னோ அருகே கோலாகஞ்ச் பகுதியில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்குத் திரும்பிய ஆசிரியர்கள், மாணவர்கள் தங்கள் பள்ளியை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர்.
திரைப்படத்தில் கிணற்றைக் காணோம் என்ற நகைச்சுவை காட்சியை இதற்கு முன் பல சம்பவங்களுடன் ஒப்பிட்டதுண்டு. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் 140 ஆண்டுகால பள்ளிக்கூட்டத்தை திடீரென காணவில்லை என்பது அவற்றில் இருந்து தினுசானதுதான்.
லக்னோ அருகே கோலாகஞ்ச் பகுதியில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்குத் திரும்பிய ஆசிரியர்கள், மாணவர்கள் தங்கள் பள்ளியை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். செண்டினல் ஹையர் செகண்டரி ஸ்கூல் மற்றும் காலேஜ் என்ற அந்த பிரபலமான அரசு உதவி பெறும் பள்ளிக்கு மாறாக, மெதடிஸ்ட் சர்ச் பள்ளி என்ற தனியார் பள்ளியின் பெயர்ப்பலகை அவர்களை வரவேற்றது. உள்ளே செல்ல முயன்றவர்களை தனியார் பள்ளி நிர்வாகம் அனுமதிக்க மறுத்து வெளியேற்றியது.
இதனால், 360 மாணவர்களும் ஆசிரியர்களும் வேறு வழியின்றி அருகிலுள்ள சாலையில் அமர்ந்து வகுப்புகளை நடத்தினர். இதையடுத்து, மாவட்ட காவல் அதிகாரியிடம் பள்ளியின் முதல்வர் ராஜீவ் டேவிட் தயாள் உடனடியாக புகார் அளித்தார். 1862ல் தொடங்கப்பட்டு புகழ்பெற்று விளங்கிய பழமையான அரசு உதவி பெறும் பள்ளி, திடீரென தனியார் பள்ளியானது எப்படி என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.