மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். மேலும் மத்திய உருக்குத் துறை அமைச்சரான ஆர்சிபி சிங்கும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
நக்வி ராஜினாமா பின்னணி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நக்வி செயல்பட்டு வந்தார். அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவி நாளையுடன் முடிவடைய உள்ளது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து பல தலைவர்கள் மாநிலங்களவைக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் நக்விக்கு பாஜகவில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது.
பாஜகவின் குடியரசு துணை தலைவர் வேட்பாளரா நக்வி?
இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் முக்தார் அப்பாஸ் நக்வி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை உறுதி செய்யும் வகையில், முக்தார் அப்பாஸ் நக்வி மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகி உள்ளார். கடைசியாக நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நக்வியின் பங்கு மிகவும் அளப்பரியது என பிரதமர் நரேந்திர மோடியும் புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.
ஆர்சிபி சிங் ராஜினாமா பின்னணி:
ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஆர்சிபி சிங் கடந்த ஜூலை மாதம் மத்திய உருக்குத் துறை அமைச்சராக பதவியேற்றார். ராஜ்யசபா தேர்தலில் அவருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவரது பதவியும் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், வழக்கமான நடைமுறையின்படி பிரதமரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.