எதிரிகளை அழிக்கும் விஷயத்தில் இஸ்ரேல் பாணியை இந்தியா கடைபிடிக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாகவும் ஆனால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு காரணமாக அதை செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் மத்திய அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை, பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது. இந்த தாக்குதலில் 350 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியானது. இதனையடுத்து 350 பயங்கரவாதிகளை விமானப் படையினர் கொன்றதற்கான ஆதாரம் என்ன என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
இதற்கு பாஜக கட்சியைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் வி.கே.சிங், இந்திய ராணுவம் தேசத்தின் எதிரிகளை அழித்தபோது அதை பலர் அவமதித்ததாகவும் ஆனால் இஸ்ரேல் ராணுவம் எதிரிகளை அழித்தபோது இத்தகைய எதிர்ப்புகளை சந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அரசை எதிர்ப்பவர்கள் மற்றும் விமர்சிப்பவர்களை கடுமையாக சாடிய முன்னாள் ராணுவத் தளபதியான மத்திய அமைச்சர் வி.கே சிங், இதுபோன்ற சூழலில் உள்நாட்டுக்குள்ளேயே சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்றதொரு கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதாக தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார். இதை நடத்தாவிட்டால் கொள்ளையர்கள் இந்த நாட்டை கொள்ளையடிக்கத் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் வி.கே. சிங் கடுமையாக சாட்டியுள்ளார்.
இதுபோன்ற சூழலில் இஸ்ரேலின் பாணியை பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தாலும் அந்த நிலை இங்கு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பால்கோட் தாக்குதல் விவகாரம் குறித்து பேசிய வி.கே.சிங், தூக்கத்தைக் கெடுக்கும் போது அடித்துக்கொல்லும் கொசுக்களை எண்ணிக்கொண்டு இருக்க முடியுமா என்று தெரிவித்திருந்தார்.