லக்கிம்பூர் கேரியில் கார் ஏற்றப்பட்டு விவசாயிகள் உயிரிழந்த வழக்கில் , மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது ஏறிச் சென்றது. இந்த சம்பவத்தில் 4 விவசாயிகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
எனினும், இதனை கொலை வழக்காக பதிவு செய்யாமல் விபத்து வழக்காக போலீஸார் பதிவு செய்தனர். ஆளுங்கட்சியான பாஜகவின் அழுத்தத்தின் பேரிலேயே போலீஸார் இந்த வழக்கில் அலட்சியம் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதையடுத்து, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், போலீஸாருக்கு அடுத்தடுத்து பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ஆசிஷ் மிஸ்ராவும் கைது செய்யப்பட்டார். அவர் தனக்கு ஜாமீன் வழங்குமாறு பல முறை மனு அளித்த போதிலும், நீதிமன்றங்கள் அதனை நிராகரித்தன.
இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "விவசாயிகள் மீது கார் ஏறிச் செல்லும் பல வீடியோக்களை போலீஸாருக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதில் ஒன்றில் கூட ஆசிஷ் மிஸ்ரா இல்லை. அவருக்கு எதிராக வலுவான சாட்சியங்களும் போலீஸாரிடம் கிடையாது" என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வரும் சூழலில், ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.