கர்நாடக மாநிலத்தில் கொண்டாடப்பட உள்ள திப்புசுல்தான் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள முடியாது என மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டே தெரிவித்திருக்கிறார்.
18ம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் ஜெயந்தி விழாவை நவம்பர் மாதம் கொண்டாட கர்நாடக மாநில அரசு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இந்த நிலையில் அந்த விழாவில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டே கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். திப்புசுல்தான் இந்துக்களுக்கும் கன்னடர்களுக்கும் எதிரானவர் என அந்தக் கடிதத்தில் ஆனந்த்குமார் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
திப்புசுல்தான் பிரிட்டீஸ் ஆட்சியாளர்களைக் கடுமையாக எதிர்த்தவர் என்றும் அவர் ஒரு இஸ்லாமிய மன்னராக இருந்த போதிலும் மதநல்லிணக்கத்தைப் பேணியவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தரப்பில் திப்பு சுல்தான் தனது ஆட்சிக்காலத்தில் இந்துக்களைக் கட்டாயமாக மதமாற்றம் செய்ததாகவும் படுகொலை செய்ததாகவும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆனந்த்குமார் ஹெக்டே தன்னால் திப்பு ஜெயந்தி விழாவில் பங்கேற்க முடியாது என்று கூறியிருக்கிறார். இது குறித்து கருத்துத் தெரிவித்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, அமைச்சர் ஆனந்த் குமார் முதலில் திப்புவைப் பற்றிப் படிக்க வேண்டும். அவர் இத்தகைய கடிதத்தை எழுதியிருக்கக் கூடாது என்று கூறினார்.