வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள சந்தேகத்தை பாரதிய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த வேண்டும் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 22 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே, விவிபாட் இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும் சோதனை செய்யவேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியே மீண்டும் அமைய வேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளதாகவும் எனவே எதிர்க்கட்சிகள் பெருந்தன்மையுடன் தேர்தல் முடிவை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, அமரிந்தர் சிங் ஆகியோர் ஆட்சிக்கு வரும் போது எதிர்க்கட்சிகள் வாக்கு இயந்திரத்தின் மீது குற்றஞ்சாட்டவில்லை என்றும் ஆனால் மோடி ஆட்சிக்கு வந்தால் மட்டும் அக்குற்றச்சாட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மிகப்பெரிய தோல்விக்கு காரணம் காட்டவே தற்போது எதிர்க்கட்சிகள் தயாராகி வருவதாக பாஜக செய்தித் தொடர்பாளர் நரசிம்மராவ் தெரிவித்தார்